உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலனுக்காகத் தனது சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் உயிரிழந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற தாந்த்ரீகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த முறையற்ற உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ஏதோ ஒரு சடங்கு செய்யப் போவதாகக் கூறி, தனது 13 மற்றும் 10 வயதுடைய இரண்டு மகள்களையும் அந்தத் தாய் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த மகேந்திர சிங்கிடம் தனது மகள்களை அந்தப் பெண்ணே ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மகேந்திர சிங் அந்த இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் ரீதியான கொடூரங்களை இழைத்துள்ளார்.
இந்தக் கொடுமை குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகக் காதலனும், தாயும் சிறுமிகளை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமிகள் கடந்த சில மாதங்களாக யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளனர். சமீபத்தில் அச்சத்தைப் போக்கி தைரியமாகத் தனது தாத்தாவிடம் சிறுமிகள் முறையிட்டுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் தாத்தா அளித்த புகாரின் பேரில், போலீஸார் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மூத்த காவல் கண்காணிப்பாளர் சத்பால் அந்தில் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த தாந்த்ரீகன் மகேந்திர சிங் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் பெற்ற தாயே காமத்திற்காகத் தனது மகள்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
