கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பழைய பொருட்களை வாங்குவது போலக் ‘குட்டி யானை’ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டின் முன்னே இருந்த சைக்கிளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிபெருக்கியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் வாங்குவதாக அறிவிப்பு செய்துகொண்டே வந்த அவர்கள், சைக்கிளைத் தூக்கும்போது மட்டும் சத்தத்தை அணைத்துவிட்டு மின்னல் வேகத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் திருடர்களின் தந்திரம் அம்பலமானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பழைய பொருள் வாங்க வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என மக்கள் ஒருவருக்கொருவர் அலர்ட் கொடுத்து வருகின்றனர்.
பழைய இரும்புக்கு பதில் சைக்கிள் அபேஸ்; 'குட்டி யானையில்' வந்த பலகில்லாடி திருடர்கள்: அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சி#coimbatore #viral pic.twitter.com/GeLkuGdIzG
— Indian Express Tamil (@IeTamil) February 21, 2026
மறுபுறம், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மீதான தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும், தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் அவர் சாடினார். “2026-ல் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்பதெல்லாம் பகல் கனவு” என்று கூறிய அவர், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், திமுக அமைச்சர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.
