உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில் தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றும் அரணாக இருக்கும் என உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவில் அவர் பகிர்ந்த திருவள்ளுவர் படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. வெள்ளை உடைக்கு பதில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் பதிவிடப்பட்டதைக் கண்ட நெட்டிசன்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், “அதிமுகவின் கொள்கை மாறிவிட்டதா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
நம் உயிருக்கு நேராம்,
சமூகத்தின் விளைவுக்கு நீராம்,
உரிமைச் செம்பயிருக்கு வேராம்,
உயர்வுக்கு வானாம்,
பிறவிக்குத் தாயாம்,
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்…தமிழுக்கும் தமிழருக்கும் @AIADMKOfficial என்றென்றும் அரணாக விளங்கும் என்று…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 21, 2026
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஈபிஎஸ் தரப்பு, உடனடியாக அந்தப் பதிவை நீக்கம் செய்தது. பின்னர், வழக்கமான வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் புதிய பதிவை அவர் வெளியிட்டார். “தெரியாமல் நடந்த தவறா அல்லது திட்டமிட்ட நகர்வா?” என சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கும் நிலையில், இந்த ‘காவி’ விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
