தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதன்மை கண்காணிப்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதில், கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்தபடியாக, மூத்த அரசியல்வாதியான கே.ஏ. செங்கோட்டையனின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் பல தசாப்தங்களாகப் பணியாற்றிய செங்கோட்டையனுக்கு, தவெகவில் வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் அவர் தரப்பினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​அத்துடன், செங்கோட்டையனுடன் இணைந்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்பி சத்தியபாமாவுக்கும் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டங்களின் கண்காணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்த விஜய் மிகப்பெரிய ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. செங்கோட்டையனின் அனுபவமும், சத்தியபாமாவின் களப்பணியும் தவெகவிற்கு அந்த மண்டலத்தில் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.