விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து தனது கருத்தை அதிரடியாகப் பதிவு செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் குறித்துப் பேசிய அவர், அஇஅதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, இந்த அறிவிப்பு தலையில் இடி விழுந்தது போல் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது தேமுதிகவின் இந்த வரவு அவருக்குப் பேரிடியாக அமைந்துள்ளதாகத் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கூட்டணி மாற்றம் குறித்துத் தனது பார்வையை முன்வைத்த திருமாவளவன், அதிமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தடுத்து நிறுத்தி, சனாதன சக்திகள் தமிழகத்தில் காலூன்றாமல் இருப்பதே தங்களின் நோக்கம் என்று விளக்கினார்.
மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட புதிய வரவுகள் இருந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில், தேமுதிகவின் இந்த முடிவு குறித்துக் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “எந்தக் கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் விருப்பம்” எனச் சுருக்கமாகப் பதிலளித்துத் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
