டெல்லியில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஏஐ மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அதன் சவால்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நவீன தொழில்நுட்ப உலகின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

இந்த மாநாடு குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “முதல் சில நாட்கள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்காக உலகத் தலைவர்கள் ஒன்று கூடியிருப்பது பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் ஆளும் தரப்பின் முன்னெடுப்புகளை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கமாக உள்ள நிலையில், சசி தரூரின் இந்த நேர்மறையான கருத்து அரசியல் களத்தில் விவாதங்களையும், சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.