சர்வதேச குற்றக் கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்த ‘மேடம் சேகர்’ என்று அழைக்கப்படும் நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி மற்றும் அவரது கூட்டாளிகளை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஒரு சாதாரண பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேஹா, அதன் பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை ரகசியமாக நிர்வகித்து வந்த பெண் தாதாவாகச் செயல்பட்டுள்ளார்.
மேலும் இவருடன் மஃபூஸ் என்கிற பாபி கபுதர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் பெரும் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பாபி கபுதர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய ‘சலீம் பிஸ்டல்’ என்பவரிடமிருந்து ஆயுதங்களை வாங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆயுதங்கள் பஞ்சாபி பாடகர் சிந்து மூஸேவாலா கொலை மற்றும் பிரபல நடிகை திஷா பதானி வீட்டின் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற முக்கிய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோய்,
இந்நிலையில் தனது கூட்டாளிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களை நாடு முழுவதும் அரங்கேற்றி வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை அந்த கும்பலின் சர்வதேச நெட்வொர்க்கை உடைப்பதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
