டெல்லியில் நேற்று தொடங்கிய செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த முக்கிய நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களும், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் முகேஷ் அம்பானி போன்ற முன்னணி தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.சிப் தயாரிப்பு, பசுமை எரிசக்தி மற்றும் ‘ஏ.ஐ. மிஷன்’ போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு குறிப்பிட்ட துறைக்கானது மட்டுமல்ல, அது அனைத்துத் துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.