உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நீட் தேர்விற்குத் தயாராக வந்த மாணவியை ஆசை வார்த்தை கூறித் திருமணம் செய்து, பெண் குழந்தை பிறந்த பிறகு கார் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு நீட் தேர்விற்குப் பயில்வதற்காக லக்னோவிற்கு வந்துள்ளார். அவர்  பயிற்சி மையத்திற்குச் செல்வதற்காக வழக்கமாக ஒரு டாக்ஸியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த காரின் ஓட்டுநரான ஆதித்ய யாதவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆதித்ய யாதவ் அந்தப் பெண்ணுக்கு இலவசமாக கார் ஓட்டக் கற்றுக்கொடுத்ததுடன், இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். பின்னர், சந்திரிகா தேவி கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் ஆதித்ய அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஒருமுறை அந்தப் பெண்ணுக்குத் தேநீரில் மயக்க மருந்து கொடுத்து ஆதித்ய அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதில் அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். தான் குழந்தையை ஏற்றுக்கொள்வதாகவும், குடும்பமாக வாழலாம் என்றும் ஆதித்ய ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த மூன்று நாட்களில், மருந்து வாங்கி வருவதாகக் கூறிச் சென்ற ஆதித்ய அதன்பின் திரும்பவில்லை. செல்போன் மூலம் அவரைத் தொடர்பு கொண்டபோது, “உன்னையும் குழந்தையையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது; வேண்டுமானால் செத்துப் போங்கள்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே மறைந்துவிட்ட நிலையில், தாய்க்குத் தெரியாமல் லக்னோவில் தங்கியுள்ளார். தற்போது கையில் பணமின்றி, உணவிற்கும் குழந்தையின் பாலுக்கும் கூட வழியின்றி அந்தப் பெண் தவித்து வருகிறார். இது குறித்து பிப்ரவரி 18-ஆம் தேதி லக்னோ இணை ஆணையர்  பப்லு குமாரைச் சந்தித்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.  மேலும் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை, தலைமறைவாக உள்ள ஆதித்ய யாதவைத் தேடி வருவதாகவும், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.