பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்த அச்சத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸைச் சேர்ந்த கரண் தஞ்சு என்பவர், தனது நண்பருடன் ஒரு வினோதமான பந்தயம் கட்டினார். அதன்படி, தஞ்சுவின் நண்பர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் தலா 50 ரூபாய் தருவதாக கரண் தஞ்சு ஒப்புக்கொண்டார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட இருவரும், அங்குள்ள ஒரு உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றனர்.
இருவரும் உற்சாகமாக பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத ஒரு அருவருப்பான சம்பவம் நிகழ்ந்தது. பானி பூரிக்கான மசாலா தண்ணீர் வைக்கப்பட்டிருந்த வாளிக்குள் திடீரென ஒரு எலி விழுந்தது. அந்த எலி தண்ணீருக்குள் உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் நீந்திக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடைக்காரர் மிகவும் சிரமப்பட்டு அந்த எலியை வாளியிலிருந்து வெளியே எடுத்துப் போட்டார்.
View this post on Instagram
பொதுவாக இதுபோன்ற ஒரு காட்சியைக் கண்டால் எவரும் அங்கிருந்து ஓடிவிடுவார்கள். ஆனால், கரண் தஞ்சுவின் நண்பரோ எலி விழுந்ததை நேரில் பார்த்த பிறகும், தனது பந்தயத்தை நிறுத்த மறுத்துவிட்டார். மசாலா தண்ணீரில் எலி நீந்தியதை அறிந்தும், அதே கடையிலேயே தொடர்ந்து பானி பூரிகளைச் சாப்பிட்டார். மளமளவென 31 பானி பூரிகளைச் சாப்பிட்டு முடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் நகைச்சுவையாக, “பானி பூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணமோ?” என்று கிண்டலாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், தெருவோர உணவுகளில் நிலவும் சுகாதாரக் குறைபாடு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
