ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் பன் வியாபாரம் செய்து வரும் முதியவர் ஒருவரை, ‘உணவு’ எனக்கூறி சில யூடியூபர்கள் துன்புறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவரின் விற்பனைப் பொருட்களில் ஏதோ கலப்படம் இருப்பதாகக் கூறி, அவரைச் சூழ்ந்துகொண்டு மிரட்டும் வகையில் அந்த யூடியூபர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
மேலும் உழைத்து வாழும் ஒரு எளிய வியாபாரியை மத ரீதியான அடையாளங்களைக் கொண்டு செய்து இழிவுபடுத்திய இந்தச் செயல், மனிதநேயமற்றது எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த ஆந்திர அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவருமான நாரா லோகேஷ், இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களுக்கும், அப்பாவி மக்களைத் துன்புறுத்துபவர்களுக்கும் ஆந்திராவில் இடமில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த முதியவருக்குப் பாதுகாப்பை உறுதி செய்துள்ள அவர், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அராஜகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். வெறுப்பு அரசியலை விட வளர்ச்சியும், நல்லிணக்கமுமே முக்கியம் என்பதை நாரா லோகேஷின் இந்தப் பதிவு வெளிப்படுத்தியுள்ளது.
