கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 10 நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை ஊர்வலம் நடந்தபோது, அங்கு வந்திருந்த திமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென தனது கையில் வைத்திருந்த கட்டுக்கட்டான 100 ரூபாய் நோட்டுகளைச் சாமிக்கு மேலாகவும், மக்கள் கூட்டத்தை நோக்கியும் வாரி வீசினார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், கீழே விழுந்த பணத்தை எடுப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்ததால் அந்த இடமே பெரும் பரபரப்பானது.
பக்தி பரவசத்துடன் நடக்க வேண்டிய கோவில் திருவிழாவில், இப்படிப் பணத்தை வாரி இறைத்து தள்ளுமுள்ளுவை ஏற்படுத்திய கவுன்சிலரின் செயல் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த இந்த ‘பணமழை’ வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “சாமி கும்பிட வந்த இடத்துல இதெல்லாம் தேவையா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த வீடியோ அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
