டெல்லி நங்லோய் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த தம்பதியினரை இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி போலீசார் பீகாரில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சிக்கந்தர் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகிய இருவரும் இந்தக் கொடூரக் கொலையைச் செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருக்க டெல்லி, பீகார் மற்றும் மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கூலித் தொழிலாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தப்பி வந்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இவர்களைப் பிடிக்க, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் பீகாரின் பாங்கா மாவட்டத்தில் பதினைந்து நாட்கள் முகாமிட்டு ரகசியமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையுண்ட சிறுமியின் தந்தை கணேஷ் என்பவரிடம் சிக்கந்தர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். பல ஆண்டுகளாக உழைத்ததற்கான கூலிப் பணத்தை கணேஷ் தராமல் ஏமாற்றியதுடன், சிக்கந்தருக்கு வாங்கித் தருவதாகக் கூறிய நிலத்தையும் தனது பெயரிலேயே வாங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிக்கந்தரும் அவரது மனைவியும், பழிவாங்கும் நோக்கில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேஷின் மகளைக் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தலைமறைவாக இருந்தபோதும், போலீசாரின் விடாமுயற்சியால் தற்போது இந்தத் தம்பதியினர் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.