தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார்.

கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ந.சுப்பிரமணியன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அண்மையில் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெக-வில் இணைந்த வரிசையில், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த சுப்பிரமணியன், சால்வை அணிவித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இச்சந்திப்பின் போது தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.