தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை எனக் குறிப்பிட்டதோடு, விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், நடிகை த்ரிஷா தொடர்பான தனிப்பட்ட விமர்சனங்களையும் முன்வைத்தார்.

விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் நடந்த உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் பேசிய விதம் கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

நயினார் நாகேந்திரனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு தவெக மற்றும் திமுக தரப்பிலிருந்து வலுவான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர் அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக் கூட இழந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.

தவெகவின் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியமாகப் பேசுவார் என்று அவர் நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், தேர்தல் நேரத்தில் 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கிய ஒரு நபர் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று நாஞ்சில் சம்பத் எள்ளி நகையாடியுள்ளார்.

விஜய் மீது விழும் அரசியல் வெளிச்சத்தைப் பார்த்துப் பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வரம்பு மீறி விமர்சனம் செய்தால் தமிழகப் பெண்களிடமிருந்து தகுந்த பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நயினார் பேசியது கண்டனத்திற்குரியது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.