ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற ‘போனி டைனிங்’ (Pony Dining) உணவகத்தில், சுமார் 54 ஆயிரம் ரூபாய் (600 டாலர்) பில் கட்டாமல் இருப்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் செய்த அருவருப்பான செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த உணவகத்தில் விலை உயர்ந்த ‘டோமாஹாக் ஸ்டீக்’ உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட்டு முடித்துள்ளனர்.

​பில் கட்ட வேண்டிய நேரத்தில், தங்களது தட்டில் முடி இருப்பதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் உணவக நிர்வாகம் அவர்களிடம் பில் தொகையைப் பெறவில்லை. ஆனால், அந்த முடியைப் பார்த்த தலைமை சமையல்காரருக்கு சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த ஒரு நபர் தனது அக்குளில் இருந்து முடியைப் பிடுங்கி, மீதமிருந்த எலும்பு துண்டின் மீது லாவகமாக வைப்பது பதிவாகியிருந்தது.

​அந்த நபர் ஒரு ‘சீரியல்’ மோசடி மன்னன் என்பதும், இதற்கு முன்பு அருகில் உள்ள மற்ற உணவகங்களிலும் “சாப்பாட்டில் கல் இருக்கிறது” என்று கூறி ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் செயலால் சிறு உணவகங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பதாக உணவக உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். தற்போது இந்த மோசடி குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓசி சாப்பாட்டுக்காக இப்படியா அநாகரீகமாக நடந்துகொள்வது என்று சமூக வலைதளங்களில் அந்த நபருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.