வந்தவாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன் மற்றும் தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் வசித்து வந்த இந்த சிறுவர்கள், நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

மேலும் தொடர் மழையினால் ஊறியிருந்த வீட்டின் மண்குவர் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

இந்நிலையில் பலியான சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தது அந்த கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.