பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளுக்காக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் அவரைச் சந்தித்த உச்ச நீதிமன்ற உதவியாளர் தாக்கல் செய்த அறிக்கையில், இம்ரான் கானுக்கு தற்போது 15 சதவீதப் பார்வை மட்டுமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வலது கண் நரம்பில் ஏற்பட்ட ரத்த உறைவு மற்றும் அடைப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இம்ரான் கானின் பார்வைத்திறன் சீராக இருந்த நிலையில், அதன் பின்னர் படிப்படியாகப் பார்வை மங்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு முறையான சிகிச்சை அளிக்கத் தவறியதே இந்தப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக நீதிமன்ற உதவியாளர் தனது அறிக்கையில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தது.
வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து அவருக்கு முழுமையான உடல் பரிசோதனை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவும், தனது மகன்களுடன் தொலைபேசியில் பேசவும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
