சுமார் 60 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் 89 சிறுவர், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 79 வயது ஓய்வுபெற்ற பிரெஞ்சு ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பிரான்ஸின் கிரெனோபில் நகரத்தைச் சேர்ந்த ஜாக்ஸ் (Jacques) என்ற 79 வயது முதியவர், ஒரு பகுதிநேர ஆசிரியராகவும், குகை ஆய்வு (Speleology) பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் 1960 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஜெர்மனி, நைஜர், அல்ஜீரியா, இந்தியா, சுவிட்சர்லாந்து, மொராக்கோ, பிரான்ஸ் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜாக்ஸின் மருமகன் அவரது அறையைச் சோதனையிட்டபோது ஒரு பென்-டிரைவ் சிக்கியுள்ளது. அதில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்த டிஜிட்டல் குறிப்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அதனைப் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜாக்ஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கைக் கையாண்டு வரும் அரசு வழக்கறிஞர் எட்டியென் மாண்டூக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு: 13 முதல் 17 வயதுடைய சிறுவர்களைக் குறிவைத்து ஜாக்ஸ் தனது வன்கொடுமைகளை அரங்கேற்றியுள்ளார். வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் என்ற பெயரில் மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களைச் சீரழித்துள்ளார். பாதிக்கப்பட்ட 89 பேரில் இதுவரை 40 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டறிய ஜாக்ஸின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாலியல் குற்றங்கள் மட்டுமின்றி, விசாரணையின் போது ஜாக்ஸ் இரண்டு கொலைகளைச் செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். 1970-களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயையும், 1990-களில் தனது 92 வயது அத்தையையும் தலையணையால் அழுத்திப் படுகொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாகத் தனியாகக் கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது தென்கிழக்கு பிரான்சில் சிறையிலுள்ள ஜாக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், துணிச்சலுடன் முன்வந்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.