கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து, இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தன்னை ‘தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளி’ என்று அறிவித்ததை எதிர்த்து மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “இந்திய அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து லண்டனில் தங்கியிருக்கும் அதேவேளையில், இந்திய நீதிமன்றங்களில் நிவாரணம் கோருவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று முகத்திலடித்தார் போலக் கூறியுள்ளது.

​”உங்கள் வழக்கை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் இந்தியாவுக்குத் திரும்பி வாருங்கள்” என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்படாமல் வெளிநாட்டில் பதுங்கியிருப்பவர்களுக்கு நீதிமன்றம் எந்தச் சலுகையும் காட்டாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் லண்டனில் இருந்துகொண்டே வழக்குகளைச் சமாளிக்கலாம் என நினைத்த விஜய் மல்லையாவின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.