காதலி தொலைபேசி அழைப்பை ஏற்காததால் ஆத்திரமடைந்த காதலன், நள்ளிரவில் அவர் வீட்டிற்கே சென்று கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக காஜல் என்பவரை காதலித்து வந்த ரோகித் என்ற இளைஞர், காஜலுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமான பிறகு அவர் சரியாகப் பேசவில்லை என்று ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு காஜலின் தொலைபேசி எண் தொடர்ந்து பிஸியாக இருந்ததால், ஆவேசமடைந்த ரோகித் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று காஜலின் அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது காஜல் தனது வருங்கால கணவருடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, காஜல் அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ரோகித், அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து காஜலின் கழுத்தில் சரமாரியாகக் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொலை தொடர்பாக ரோகித்தை கைது செய்துள்ள காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 5 முறை காஜலுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போதெல்லாம், ரோகித்தின் வற்புறுத்தலால் காஜல் அந்தத் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் இந்த முறை காஜல் தனது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததுடன், ரோகித்தை முழுமையாகத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட பொறாமை மற்றும் ஆத்திரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஜலின் மூச்சை நிறுத்தும் வரை தொடர்ந்து கத்தரிக்கோலால் குத்தியதாகக் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.