உத்தரப்பிரதேசத்தில் வினோதமான, அதே சமயம் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து வைக்கக்கோரி கிராமத்திலுள்ள உயரமான செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் கோபுரத்தின் உச்சியில் இருந்து கோரிக்கைகளை முழக்கமிட்ட அந்த இளைஞர், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து கால் தவறி கீழே விழுந்தார்.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்காக உயிரையே பணையம் வைத்து இளைஞர் செய்த இந்த விபரீத முயற்சி, இறுதியில் அவரது மரணத்தில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“>

இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்கும் தீர்வு தற்கொலை முயற்சியோ அல்லது இதுபோன்ற ஆபத்தான போராட்டங்களோ அல்ல என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வேதனையுடன் நினைவுறுத்துகிறது.