ஒடிசா மாநிலத்தில் பேன் தொல்லையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் 12 வயது சிறுமி உயிரிழந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூரி மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷிபிரியா என்ற 6-ஆம் வகுப்பு மாணவி, நீண்ட நாட்களாக அதீத பேன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக அவர் சிகிச்சைப் பெற்றும் பலன் அளிக்காத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு பேன் தொல்லை மற்றும் வாந்தியைத் தடுப்பதற்கான மருந்துகள் வழங்கப்பட்டன. இருப்பினும், அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சிறுமியின் மரணத்திற்கு பேன் தொல்லையால் ஏற்பட்ட தீவிரமான தோல் தொற்று காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். தலையில் பேன்கள் அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட காயங்கள் வழியாக தொற்று பரவி இருக்கக்கூடும் அல்லது பேன் தொல்லைக்காகப் பயன்படுத்தப்பட்ட மருந்தின் பக்கவிளைவுகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியின் தலையிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், அவர் தலைமுடியை வெட்ட மறுத்ததாகவும் அவரது தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.