தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சீதாம்பேட்டை பகுதியில், சொத்து ஆசையில் தனது அண்ணன் குடும்பத்தினரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற தம்பியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பானோத்து ரமேஷ் என்பவருக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அஞ்சலி என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத ரமேஷின் தம்பி ராஜேஷ், திருமண வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, ரமேஷின் மாமனார் ராமதாஸ் மற்றும் மாமியார் கௌசல்யா ஆகியோர் மீது ராஜேஷ் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் கௌசல்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராமதாஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் நிற்காமல், ராஜேஷ் தனது அண்ணன் மனைவி அஞ்சலி மற்றும் தனது சொந்த மனைவி ஜோதி ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டமிட்ட கொலை முயற்சியை ராஜேஷ் அரங்கேற்றியதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ராஜேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
