சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு திமுக கவுன்சிலர் அயுப்கான் செய்த ஒரு காரியம், இப்போது தமிழக அரசியலில் ஒரு நகைச்சுவையான விவாதத்தையே கிளப்பியுள்ளது. வழக்கமாகத் தூய்மைப் பணியாளர்கள் காலை வேளையில் வீடுகளுக்கு வரும்போது விசில் ஊதி பொதுமக்களை அழைப்பது வழக்கம். ஆனால், தேர்தல் ஆணையம் சமீபத்தில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனால் தன் வார்டு பகுதியில் விசில் சத்தம் கேட்டால் அது விஜய்க்கு விளம்பரம் போல அமைந்துவிடும் என்று பயந்த கவுன்சிலர் அயுப்கான், தூய்மைப் பணியாளர்களுக்கு அதிரடியாக மைக் செட் வாங்கிக் கொடுத்துள்ளார்.

​அதுமட்டுமில்லாமல், அந்தப் பணியாளர்களிடம் இருந்த விசில்களைப் பிடுங்கி, அவர்கள் கொண்டு வந்த குப்பை வண்டியிலேயே வீசி எறிந்து தனது “பாசத்தைக்” காட்டியுள்ளார். “இனிமேல் என் வார்டுக்குள்ள விசில் சத்தம் கேட்கக் கூடாது, மைக்ல சொல்லுங்க” என்று அவர் போட்ட உத்தரவு சிவகங்கை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு விசிலுக்கே இவ்வளவு பதறுறாங்களே, நாளைக்குத் தேர்தல் வந்தா என்ன செய்வாங்களோ?” என்று த.வெ.க தொண்டர்கள் இந்தச் சம்பவத்தைச் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.