அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெய்ன்ஸ்வில் பகுதியில் உள்ள பிரவுன்ஸ் பிரிட்ஜ் சாலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், தரையிறங்கிய ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம் சாலையில் சென்றுகொண்டிருந்த மூன்று வாகனங்கள் மீது மோதியது.

மேலும் விமான நிலையத்திற்குத் திரும்புவதற்குப் போதுமான சக்தி இல்லாததால், வேறு வழியின்றி விமானி சாலையிலேயே தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தின்போது விமானத்தின் எரிபொருள் டேங்க் கார் ஒன்றின் மீது மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெரிய அளவில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இதனால் விமானத்தில் இருந்தவர்கள் காயமின்றி தப்பிய நிலையில், கார்களில் இருந்த இருவர் மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் விமானி லாவகமாகத் தரையிறங்கியது பெரும் பேரழிவைத் தடுத்திருப்பதாக அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.