தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், பிஎப் பணத்தை இனி யுபிஐ தளம் வாயிலாகவே நேரடியாகத் திரும்பப் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பிஎப் தொகையைப் பெறுவதற்கு வங்கி கணக்கு விவரங்களை அளித்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் யுபிஐ-பின் எண்ணைப் பயன்படுத்தி இந்தப் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும், இதன் மூலம் பெறப்படும் தொகையை உடனடியாக டிஜிட்டல் முறையிலோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன வசதியானது வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. இதற்கான தொழில்நுட்பக் குறைபாடுகளைக் களைந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், தற்போது சுமார் 100 மாதிரி கணக்குகளைக் கொண்டு இபிஎப்ஓ நிறுவனம் முதற்கட்ட ஒத்திகையை நடத்தி வருகிறது.

இதனால் தொழிலாளர் நலத்துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய செயலியை மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளது. இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது, தொழிலாளர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎப் பணத்தை எவ்விதத் தாமதமும் இன்றி மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகை ஏற்படும்.