சென்னையில் நேற்று பாஜக மேலிடத் தலைவர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் மாநிலத் தலைவரை விட நிர்வாக ரீதியாக அதிக அதிகாரம் கொண்ட இந்தப் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பதவியில் இருந்த கேசவ விநாயகம், முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நீண்ட நாட்களாகப் பனிப்போரில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கேசவ விநாயகம் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து வந்த நிலையில், அண்ணாமலை தரப்பின் வலியுறுத்தலின் பேரிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. கட்சியின் உள்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முடிவு, தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை தனது பெற்றோரின் உடல்நலக் காரணங்களுக்காகத் தேர்தல் பணிகளிலிருந்து விலகியிருந்தாலும், அவரது கோரிக்கைக்கு மேலிடம் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.
மேலும், இன்றைய கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு பி.எல். சந்தோஷ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்ணாமலையின் தற்காலிக விலகல் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலான தனிப்பட்ட முடிவு என்றும், அதனை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த அதிரடி மாற்றங்கள் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வாகக் கருதப்படுகிறது.
