திமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் கொடியேற்றி உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வெற்றி வாய்ப்புள்ள 5 இடங்களை திமுகவிடம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிலும் இருக்கும் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு, தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து பயணிக்கும் என்பதையும் அவர் இந்தச் சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.