விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த துளசிராம் என்ற இளைஞர், ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்காத மனஉளைச்சலால் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.இ பட்டதாரியான இவர், கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி பாண்டியம்மாள் தனது 5 வயது மகனுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வேலையின்மை மற்றும் குடும்பப் பிரிவால் கடும் விரக்தியில் இருந்த துளசிராம், ஊசி மூலம் தனது உடலில் பாதரசத்தைச் செலுத்தித் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட துளசிராம் உடனடியாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு படித்த இளைஞர் வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், இளைய தலைமுறையினரிடையே நிலவும் வேலையின்மை குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.