தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் கொடுப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட பாஜக அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றதால், தமிழகத்தில் தனது வளர்ச்சியை நிரூபிக்க குறைந்தபட்சம் 30 தொகுதிகளாவது வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

ஆனால், திமுகவோ தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதில் கறார் காட்டி வருவதால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் தான் மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் தங்களுக்குக் குடைச்சல் கொடுப்பதாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால், அவர்கள் கேட்கும் தொகுதிகளைக் கொண்டு பாமக, தேமுதிக போன்ற புதிய கட்சிகளை இணைக்கலாம் அல்லது கூடுதல் இடங்கள் கேட்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளைச் சமாளிக்கலாம் என திமுக தலைமை கணக்கு போடுகிறது.

“நாமலாக வெளியேற்ற வேண்டாம், அவர்களாகவே சென்றால் விட்டுவிடலாம்” என்ற மனநிலையில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுக, ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடிப்பது போல காங்கிரஸை வெளியேற்றிவிட்டு, அந்தத் தொகுதிகளை வைத்துப் புதிய கூட்டணிகளை பலப்படுத்தத் திட்டம் தீட்டி வருகிறது.

இதனால் தமிழக தேர்தல் களம் தற்போது காங்கிரஸ் – திமுக இடையிலான ஒரு பனிப்போராக மாறியுள்ளது. வரும் நாட்களில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் சென்னை வரும்போதுதான் இந்தக் கூட்டணியின் எதிர்காலம் குறித்துத் தெளிவான முடிவு தெரியவரும்.