தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன். விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் களமிறங்குவார் எனப் பலமாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் திமுகவின் பாரம்பரிய கோட்டையான நாகப்பட்டினம் தொகுதியை விஜய் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த திமுக தலைமை, விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அங்கு தங்கள் கட்சி வேட்பாளரை நேரடியாகக் களமிறக்கி, அவரைத் தோற்கடிக்க இப்போதே வியூகம் வகுத்து வருகிறது. விஜய்யை ஒரு சாதாரண ‘அரசியல் எதிரியாக’ மட்டும் பார்க்காமல், அவரை நேரடியாக எதிர்கொண்டு தங்கள் பலத்தை நிரூபிக்க திமுக தீவிரமாக உள்ளது.
ஒருவேளை விஜய் நாகப்பட்டினம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தால், தற்போது அங்கு எம்.எல்.ஏ-வாக இருக்கும் விசிக (VCK) கட்சியைத் தவிர்த்துவிட்டு, திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்காக விசிக-விற்கு வேறு ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. நாகப்பட்டினம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த மாவட்டம் என்பதால், அந்தத் தொகுதியை எக்காரணம் கொண்டும் விஜய்யிடம் இழக்க திமுக விரும்பவில்லை. அதேசமயம், விஜய் தரப்பிலும் தொகுதி வாரியாக ரகசிய சர்வேக்கள் எடுக்கப்பட்டு வருவதால், 2026 தேர்தல் களம் விஜய்க்கும் திமுகவிற்கும் இடையிலான ஒரு நேரடிப் போர்க்களமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
