உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், தொலைக்காட்சி பார்ப்பதற்குத் தாய் தடை விதித்ததால் மனமுடைந்த 12 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அமித் (என்ற) கோலு (12) என்ற சிறுவனின் தாய் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கணவரைப் பிரிந்த அவர், தனது மகளையும் மகனையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வந்துள்ளார். தனது மகன் நன்கு படித்து பொறியாளராக வர வேண்டும் என்பது அந்தத் தாயின் கனவாக இருந்துள்ளது.
சிறுவன் அமித் தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவனது படிப்பு பாதிக்கப்படுவதைக் கண்டு தாய் அடிக்கடி அவனைக் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று காலை, அமித்தின் சகோதரி பள்ளிக்குச் சென்ற நிலையில், வேலைக்குச் செல்லத் தயாரான தாய், அமித் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு கடுமையாகக் கண்டித்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
தாய் கண்டித்ததால் மிகுந்த மனவேதனையடைந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான். மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவனது அக்கா மோனி, தம்பி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் அவதேஷ் குமார் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை எனத் தெரிகிறது. தற்கொலை செய்துகொள்வது குறித்த தகவல்களைச் சிறுவன் தொலைக்காட்சி அல்லது மொபைல் போன் மூலம் அறிந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
குழந்தைகள் மொபைல் மற்றும் தொலைக்காட்சிக்கு அடிமையாவதும், சிறு கண்டனங்களைக் கூடத் தாங்க முடியாமல் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பதும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
