மகளிர் பிரீமியர் லீக் (WPL) வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு ‘அன்லக்கி’ டீமாகவே மாறிவிட்டது. 2023-ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து இப்போது முடிந்துள்ள 2026 சீசன் வரை, தொடர்ந்து 4 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியும், ஒருமுறை கூட கோப்பையைத் தொட முடியாமல் போனது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. 2023 மற்றும் 2025-ல் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அடி வாங்கி கோப்பையை இழந்த டெல்லி, 2024 மற்றும் இந்த ஆண்டு (2026) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோற்று, மீண்டும் ரன்னர்-அப் இடத்திலேயே திருப்திப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 203 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த போதிலும், ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியால் டெல்லி அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. “எல்லா முறையும் பைனல் வரை வந்து இப்படி தோற்பது வேதனையாக இருக்கிறது” என டெல்லி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறி வருகின்றனர். கிரிக்கெட் உலகில் எவ்வளவு தான் சிறப்பாக விளையாடினாலும், இறுதி நேரத்தில் வெற்றியை நழுவவிடும் டெல்லி அணியின் இந்த நிலை, ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த முறையாவது இந்த ‘பைனல் சாபத்தை’ உடைப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
