யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து புது சரித்திரம் படைத்துள்ளார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே சற்றும் தயக்கமின்றி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட அவர், வெறும் 80 பந்துகளில் 175 ரன்களைக் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். இதில் 15 பிரம்மாண்ட சிக்ஸர்களும், 15 மின்னல் வேக பவுண்டரிகளும் அடங்கும். இங்கிலாந்து பவுலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிப்போகும் அளவுக்கு வைபவ் ஆடிய ஆட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
வைபவ்வின் இந்த அசுர வேக ஆட்டத்தால், இந்திய அணி 28 ஓவர்களிலேயே 268 ரன்களைக் குவித்து இமாலய இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்ற ஒரு அழுத்தமான சூழலில், இவ்வளவு துணிச்சலாக விளையாடி ரன்களைக் குவித்த வைபவ்விற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “அடுத்த சச்சின் தயாராயிட்டார்” என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த வைபவம் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.
