சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், பொதுமக்களைக் கவரும் வகையிலான முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

​பட்ஜெட் மட்டுமின்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 18 முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக அமைச்சரவை முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. தொழில் துறை மற்றும் நிதித்துறை சார்ந்த இந்த அதிரடி முடிவுகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.