முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், வரும் தேர்தலில் சசிகலா தலைமையில் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழகத்தில் நல்லாட்சியைக் கொண்டுவர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

சசிகலா தனியாகப் புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது தனது தம்பி திவாகரன் தொடங்கிய ‘அண்ணா திராவிடர் கழகம்’ அமைப்பிற்கு மீண்டும் உயிர் கொடுத்து அதன் மூலம் தேர்தலைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கூட்டணி சேரவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.