பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மெத்தனப் போக்கை பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடுமையாகச் சாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் மற்றும் எல்லைப் பதற்றங்கள் நிலவிய காலங்களிலும், பாகிஸ்தான் அணி பலமுறை இந்தியாவிற்குச் சென்று விளையாடியுள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியத் தொடர்களை நடுநிலையான இடங்களில் மட்டுமே விளையாடுவோம் என இந்தியா பிடிவாதம் பிடித்தபோது, ஐசிசி நிர்வாகம் தூங்கிக் கொண்டிருந்ததா? என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய அணியுடன் விளையாடுவதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்வாங்கக் கூடாது என்று அக்மல் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த காலங்களில் இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களை அவமரியாதை செய்ததாகவும், அந்த இக்கட்டான தருணங்களில் ஐசிசி எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் கௌரவத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை ஐசிசி தட்டிக்கேட்கத் தவறிவிட்டதாகவும் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.