ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளி கொலுசுக்காக மூதாட்டி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி ஒருவரை குறிவைத்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கனமான வெள்ளி கொலுசுகளைத் திருடத் திட்டமிட்டுள்ளனர்.

அந்த கொலுசுகள் காலிலிருந்து கழற்ற முடியாதபடி இருந்ததால், மனிதாபிமானமற்ற முறையில் அவரது கால்களை கோடாரியால் துண்டித்து கொலுசுகளைக் கொள்ளையடித்துள்ளனர். மேலும், அவர் சத்தமிடாமல் இருக்க அவரது கழுத்தையும் அறுத்து படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு முதியவரை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.