இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய அதிரடித் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், ஐசிசி-க்கு (ICC) அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் அவரது ஆரம்பகால வளர்ச்சியைப் பற்றி ரிக்கி பாண்டிங் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். “அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான் தான்; 17 வயதில் அவர் டெல்லி அணிக்காக அறிமுகமான போதே அவரிடம் ஒரு ‘ஸ்பெஷல்’ திறமை இருப்பதை உணர்ந்தேன்.

அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக வருவார் என எனக்கு அப்போதே தெரியும். அதனால்தான், அவரை வேறு அணிக்கு மாற்ற  வேண்டாம் என டெல்லி நிர்வாகத்திடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால், எனது பேச்சைக் கேட்காமல் அவரை ஐதராபாத் அணிக்கு அனுப்பிவிட்டனர்.

அந்த முடிவு இன்றும் எனக்குப் பெரும் வருத்தத்தைத் தருகிறது” என்று பாண்டிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தற்போது டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா, வரும் உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்து ‘தொடர் நாயகன்’ விருதை வெல்வார் என்றும் பாண்டிங் கணித்துள்ளார்.