2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடக்கவிருந்த இந்தப் போட்டிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளதைக் கண்டு, இந்திய ஜாம்பவான் கபில் தேவ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“அரசியல் முடிவுகளுக்காக விளையாட்டு வீரர்களைப் பலிகடா ஆக்குவது தவறு; பாகிஸ்தான் வீரர்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை, அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ஒரு தனி மனிதனின் ஈகோ ஒரு நாட்டின் கிரிக்கெட் திறமையை அழித்துவிடக்கூடாது என்றும், இது அந்நாட்டின் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் சாடியுள்ளார்.

​இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965 மற்றும் 1971 போர்களுக்குப் பிறகு சுமார் 17 ஆண்டுகள் கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டிருந்ததை கபில் தேவ் நினைவு கூர்ந்துள்ளார். 1978-ல் தான் அறிமுகமான காலத்திலிருந்தே இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் தொடர்வதாகவும், ஆனால் தற்போதைய கடைசி நிமிடப் பின்வாங்கல் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வாரியத்தின் இந்த முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு மிகச்சிறந்த ஆட்டத்தை இழப்பார்கள் என்றும், ஐசிசி இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை என்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் தற்போது இருண்டு கிடப்பதாகவும் அவர் கவலையோடு தெரிவித்துள்ளார்.