இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது மிகப்பெரிய வணிக ரீதியான முடிவுகளை உள்ளடக்கியது; ஒருவேளைப் பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணித்தால், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பீட்டை அவர்களால் ஈடுகட்ட முடியாது. எனவே, அடுத்த 2 முதல் 4 நாட்களுக்குள் பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, கண்டிப்பாக இந்தியாவுடன் மோதும்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட எதிரணியுடன் விளையாட மாட்டோம் என்று கூறுவது சர்வதேச விளையாட்டின் மாண்பிற்கு எதிரானது என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போட்டிகளைப் புறக்கணிப்பது வேறு, இத்தகைய அரசியல் காரணங்களுக்காகப் புறக்கணிப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்குத் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது அயர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்காகப் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஐசிசி தலையிட்டு இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
