பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர், ஆஸ்திரேலியாவின் கிளீன் ஸ்வீப் வெற்றியை விட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் விசித்திரமான பந்துவீச்சு முறையால்தான் (Bowling Action) உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. தாரிக்கின் பந்துவீச்சில் அவுட்டான ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன், அவர் பந்தை எறியும் விதம் (Chucking) விதிமுறைக்கு மாறானது எனச் சைகை காட்டி சர்ச்சையைக் கிளப்பினார்.
ஆனால், இதற்குப் பதிலடி கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, “ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்களின் அவுட்டான முறையை ஆராய்வதை விட்டுவிட்டு, பந்துவீச்சாளரைத் தப்பு சொல்வது சரியல்ல” என விளாசினார். இந்த விவகாரத்தில் இந்திய நடுவர் அனில் சவுத்ரி தற்போது தாரிக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
நடுவர் அனில் சவுத்ரி கூறுகையில், தாரிக்கின் பந்துவீச்சு முறை சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், விதிமுறைகளின்படி அவரது கை மடிவதில்லை என்பதால் அவர் மீது எந்தத் தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜாவும், ஒரு வீரரைத் தேவையில்லாமல் ‘சக்கர்’ (Chucker) என்று முத்திரை குத்துவது மிகவும் கொடுமையானது எனத் தாரிக்கிற்கு ஆதரவு தெரிவித்தார்.
Usman Tariq's insta story. Looks like Cameron Green apologised from him 😸🫵 pic.twitter.com/69SIHVJGXM
— Hassan Abbasian (@HassanAbbasian) February 1, 2026
இந்தச் சர்ச்சை முற்றிய நிலையில், கேமரூன் கிரீன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இதனை உஸ்மான் தாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது” எனப் பதிவிட்டு இந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
