சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். குறிப்பாக தங்கம் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.
எந்தவொரு நாட்டின் நாணயத்தின் மீதும் முழுமையான நம்பிக்கை இல்லாத நிலையில், பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தையே அனைவரும் பார்க்கின்றனர். தனிப்பட்ட முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிக அளவில் கையிருப்பு வைக்கத் தொடங்கியுள்ளன. இதுவே விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம்,” என்றார்.
பட்ஜெட்டில் யூகப் பங்கு வர்த்தகம் (Speculative Trading) மீதான வரி உயர்த்தப்பட்டது குறித்துப் பேசிய அவர், “பங்குச் சந்தை சூதாட்டம் போன்ற வணிகத்தில் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் பணத்தை இழந்து வருகின்றனர். இது குறித்துப் பல பெற்றோர்கள் என்னிடம் நேரில் முறையிட்டு, அரசு இதில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இளைஞர்கள் இப்பழக்கத்தில் விழுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
பட்ஜெட்டின் மற்ற முக்கிய அம்சங்களாக அவர் குறிப்பிட்டவை, நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நுகர்வை விட முதலீட்டிற்கே அதிக முன்னுரிமை அளிக்கிறது. முதலீடு அதிகரித்தால் மட்டுமே நிலையான பொருளாதார வளர்ச்சி சாத்தியம். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடரும். குறிப்பாக, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜி.எஸ்.டி குறைப்பு மற்றும் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு போன்றவற்றால் தனிநபர்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் சந்தையில் நுகர்வு இன்னும் அதிகரிக்கும். மத்திய அரசின் இந்த பட்ஜெட் நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
