சென்னை பனையூரில் இன்று (பிப். 2) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி, கொடியேற்றினார்.

விழாவின் ஒரு பகுதியாகப் பாடகர் வேல்முருகனின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது, மேடையில் விஜய் உற்சாகமாகத் தொண்டர்களுடன் இணைந்து நடனமாடினார். இந்த நிகழ்வு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யைத் தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

“தம்பி விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியுமே தவிர, அரசியல் குறித்து எதுவும் தெரியாது; ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தமிழகத்தின் கலாசாரம் என்ன என்பதே தெரியாமல் அவர் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்” என்று சாடினார்.

மேலும், “அரசியல் என்பது கொள்கைப் போராட்டம், அதில் விஜய் போன்றவர்களுக்கு இடமில்லை; அவர் தொடர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று கிண்டலாகத் தெரிவித்தார். விஜய்யின் இந்த நடனம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.