மத்திய பட்ஜெட் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே திட்டங்கள், மின்னணுவியல் வளர்ச்சி மற்றும் சிறு தொழில்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற சில அம்சங்களை அவர் வரவேற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டை “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, வாரணாசி – பாட்னா நதி இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக நதிநீர் இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வை இந்த பட்ஜெட் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஜிஎஸ்டி வரியைக் குறைத்து மக்களுக்குச் சுமையற்ற பட்ஜெட்டாக இது இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் கடல்சார் வளர்ச்சி மற்றும் மீனவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் இதில் இடம்பெறாதது தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதைக் காட்டுவதாகத் தனது அறிக்கையில் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடுமையான விமர்சனங்கள், வரும் தேர்தல்களில் தேமுதிகவின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
பாஜக தலைமையிலான மத்திய அரசை அவர் வெளிப்படையாகச் சாடியுள்ளதால், பிரேமலதா விஜயகாந்த் விரைவில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இது தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
