மைசூர் காவல்துறை மற்றும் ‘ஓடனாடி’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவிருந்த 12 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஷோபா மற்றும் அவரது கூட்டாளி துளசி குமார் ஆகியோர் இந்தச் சிறுமியை அதிக விலைக்கு விற்க முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டனர். குறிப்பாக, சிறுமியின் கன்னித்தன்மையை விலையாகக் கூறி சுமார் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் சிறுமியைக் காட்டி இந்தச் சட்டவிரோத கும்பல் வியாபாரம் செய்து வந்த அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது.

​கன்னிப் பெண்களுடன் உடலுறவு கொண்டால் பாலியல் நோய்கள் மற்றும் ஆண்மைக் குறைவு நீங்கும் என்ற தவறான மற்றும் முட்டாள்தனமான நம்பிக்கையை மூலதனமாக வைத்து இந்த நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது. பிடிபட்ட ஷோபா, அந்தச் சிறுமி தனது மகள் என்றும், பிறகு உறவினர் மகள் என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி போலீசாரை ஏமாற்ற முயன்றார். தற்போது 6-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்த மாபெரும் குற்றப் பின்னணியில் இருக்கும் மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.