தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமான காரியம் அல்ல என்று மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். திமுக அரசின் ஊழல் மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான செயல்பாடுகளால் தமிழக மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும், இது பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை தங்களது பக்கம் இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும், சூப்பர் ஸ்டார்கள் அரசியலுக்கு வருவதும் போவதும் தேர்தல்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
அதே சமயம், சிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சியமைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழக மக்கள் தங்களின் நலனுக்காக மீண்டும் திமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்று அவர் கூறினார்.
இவ்வாறு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சரும், பாஜக ஆட்சியமைப்பது எளிது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் மாறி மாறித் தெரிவித்து வருவது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
