இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வங்கதேசம் முதலில் தயக்கம் காட்டியது. இதனால் அதிருப்தி அடைந்த ஐசிசி (ICC), வங்கதேசத்தை அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துள்ளது. இதற்கு ஆதரவாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் புட்சர் பேசியுள்ளார்.
“ஐசிசி எடுத்த முடிவு மிக சரியானது. ஒரு நாடு பாதுகாப்பு காரணங்களைக் கூறி கடைசி நேரத்தில் வர மறுத்தால், அவர்களை நீக்கிவிட்டு அடுத்த தகுதியான அணிக்கு வாய்ப்பு தருவதே முறை” என மார்க் புட்சர் தெரிவித்துள்ளார்.
“இந்த விஷயத்தில் வங்கதேசத்துக்கு ஆதரவாகப் பேசும் பாகிஸ்தான் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது கிரிக்கெட்டின் கௌரவத்தைக் காக்கும் நடவடிக்கை. இனிவரும் காலங்களில் மற்ற தொடர்களுக்கும் இதுவே முன்மாதிரியாக அமையும்” என்று கூறியுள்ளார்.
வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றியதால், இந்தியாவுக்கு வர வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்தது. துபாயில் போட்டிகளை நடத்த வங்கதேசம் கோரிக்கை வைத்தது. ஆனால், தொடர் ஆரம்பிக்க 15 நாட்களே இருந்த நிலையில், ஐசிசி வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்து அந்த அணியையே டிஸ்மிஸ் செய்தது.
