தமிழக அரசு அண்மையில் 2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான சின்னத்திரை மற்றும் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், ‘செம்பருத்தி’ சீரியல் புகழ் நடிகை லட்சுமி (ஊர் வம்பு லட்சுமி), இந்த விருது பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது குறித்து மிகுந்த ஆவேசத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் “இது அரசு விருதா அல்லது ஃபேமிலி விருதா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், செம்பருத்தி தொடரில் அகிலாண்டேஸ்வரி என்ற கனமான கதாபாத்திரத்திற்காக தான் கடுமையாக உழைத்ததாகவும், சொந்த குரலில் டப்பிங் பேசியும் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசு விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், தகுதியான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தன்னை விட மிகக் குறைவான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் லட்சுமி, இந்தத் தேர்வு முறையானது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே சுருங்கிவிட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். இவருடைய இந்த அதிரடியான பேச்சு தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.